பாட்டாளி மக்கள் கட்சி- 2016 - 2017 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பாட்டாளி மக்கள் கட்சி-  2016 - 2017 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை

முக்கிய அம்சங்கள்

1. 2016-17 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின்  வருவாய் வரவுகள் ரூ.2,76,943.16 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டில் மொத்த வருவாயை விட ரூ.1.04,462.78 கோடி அதிகம் ஆகும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலமும், வணிக வரி வசூலை மேம்படுத்துவதன் மூலமும் ரூ.92,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டம் வகுத்திருப்பதன் மூலமும் தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.

2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.2,80,468 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.2,42,356 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.42,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் அடைக்கப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிகமிக குறைந்த அளவிலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்படும்.

3. 2016&17 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.34,587.16 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை  ரூ.3524.86 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.

4. தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று படித்து வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். தமிழக மாணவர்களுக்கு ரூ.16,380 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.   இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.1,875.56 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான தொகையை பொதுத்துறை வங்கிகளுக்கு தமிழக அரசே செலுத்தும்.

5. கல்விக் கடன் பெற்று உயர் கல்வி கற்ற மாணவர்களில் வேலைகிடைக்காதவர்களின் விவரத்தைத் திரட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவர்களின் கடன்களையும் அரசே செலுத்தும். இந்த பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நிறைவடையும்.

மின் கட்டணம் குறைப்பு

6. தமிழ்நாட்டில் மின் கட்டணம் 10% குறைக்கப்படும். இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை மாற்றப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப் படும். இதனால் மின்கட்டணம் மேலும் 25% குறையும்.

பேரூந்துக்கட்டணம் குறைப்பு

7. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்படுகின்றன. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும், சொகுசு பேருந்துகள் மற்றும் குளிரூட்டி வசதி கொண்ட பேருந்துகளில் 8 பைசாவும் கட்டணம் குறைக்கப்படும். தமிழக வரலாற்றில் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

8. சென்னையில் மாநகரப் பேரூந்துகளின் எண்ணிக்கை 2016&17 ஆம் ஆண்டில் 4,000ஆக உயர்த்தப்படும். 2017&18 ஆம் ஆண்டில் 5,000ஆக உயர்த்தப்படும். சென்னை மாநகரப் பேருந்துகளில், இந்திய விடுதலை நாளான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் கட்டணமில்லாப் பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அன்று முதல் மாநகரப் பேருந்துகளில் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

9. மத்திய அரசுடன் பேசி தணிக்கை செய்வதன் மூலம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக்கட்டணங்கள் முறைப்படுத்தப்படும். முதலீடு ஈட்டப்பட்ட சுங்கச் சாவடிகளில் 40% மட்டுமே பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பள்ளிக் கல்வி

10.தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ&க்கு இணையான பாடத்திட்டம் 2017&18 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இப்பாடத்திட்டத்தை தயாரிக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும்.

11. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம்  10 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 500 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும்.  இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.

12. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.30,000 செலவிடப்படும்.

13.  பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

14. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

15. பள்ளிகளில் திறன் சார் கல்வி , அறிவுசார் கல்விமுறை , தொழில்கல்வி
ஆகிய கல்வி முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
அதன்படி 11-ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாகச் சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.

16. மாணவர்கள் பள்ளிகளுக்கு எளிதாகச் சென்றுவர வசதியாக, “மாணவர்கள் மட்டும்” பேருந்துகள் இயக்கப்படும்.. அனைத்து மாவட்டங்களிலும் முறையே ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு பொறியியல் கல்லூரியும் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும். அந்த வகையில், அடுத்த ஆண்டில் கடலூர், கரூர், அரியலூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
17. நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் 2017&18 ஆம் ஆண்டில் அரசுப் பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

18. தமிழ்நாட்டில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50 விழுக்காடு இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும்.

19. 2016 & 2017 ஆம் ஆண்டில் உயர்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12,500 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

புதிய கல்வி நிறுவனங்கள்

20. சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாக  தரம் உயர்த்தப்படும்.

21. தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.

22. சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (மிஸீபீவீணீஸீ மிஸீstவீtutமீ ஷீயீ ஷிநீவீமீஸீநீமீ ணிபீuநீணீtவீஷீஸீ ணீஸீபீ ஸிமீsமீணீக்ஷீநீலீ - மிமிஷிணிஸி) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, ஓராண்டிற்குள் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடங்கப்படும்.

23. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி.க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஜிணீனீவீறீஸீணீபீu மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ் - ஜிமிஜி) அமைக்கப்படும்.

24. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும்.

25. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக 2017&18ஆம் ஆண்டில் 10 மாவட்டங்களில் மகளிர் கல்லூரிகள் தொடங்கப்படும்.

விவசாயம்
26. வேளாண்மைக்குத் தேவையான தரமான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட அனைத்து இடுபொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

27. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் தடையின்றி பயிர்க்கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நடப்பாண்டில் ரூ.8,000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

28. விவசாய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும். இதை விவசாயிகள் உழவுப் பணிகளுக்காக கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

29. நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவில் 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும்.
உழவர்கள் தற்கொலை தடுப்புத் திட்டம்
30. உழவர்கள் தற்கொலையை தடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்கள்:

1. வேளாண் விளைப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேளாண் விலை நிர்ணய வாரியம் ஏற்படுத்தப்படும். அதன்மூலம்  உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
2. உழவர் ஊதியக்குழு அமைத்து, அக்குழுவின் வழியாக வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை, வேளாண்மையில் ஈடுபடுவோருக்கு நேரடி ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
3. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கவேண்டிய நிலுவைத்தொகை முழுவதும்  அடுத்த 2 மாதங்களுக்குள் பெற்றுத்தரப்படும்.
4. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் மிகவும் எளிதாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
5. சீரமைக்கப்பட்ட பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின்படி, இயற்கைச் சீற்றத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்கப்படும்.

31. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் வளத்தை பெருக்கும் நோக்குடன்  நீர்ப்பாசனப் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

32.  மேகதாது அணை திட்டத்தை தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன், மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தங்களும் தரப்படும்.
33. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஊழல் ஒழிப்பு

34. ஊழலை ஒழிப்பதற்காக 12 அம்சத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் அதன் தலைமை அதிகாரி ஊழல் ஒழிப்பு அதிகாரியாக அறிவிக்கப்பட்டு, அவரிடம் ஊழல் ஒழிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்படும். ஏதேனும் துறையில் ஊழல் நடந்தால் அதற்கு அதன் தலைமை அதிகாரியே பொறுப்பாவார். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

35. ஊழலை ஒழிப்பதற்கான இன்னொரு முக்கிய நடவடிக்கையாக தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும். அதன் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
* லோக் அயுக்தா தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கும்.
*  முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லோக்அயுக்தா வரம்பிற்குள் கொண்டுவரப்படுவர்.
* ஊழல் வழக்குகள் 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
*   ஊழல் அதிகாரிக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை விதிக்கப்படுவதுடன், அவரது ஊழலால்  அரசுக்கு ஏற்பட்ட இழப்பும் அவரிடமிருந்து வசூலிக்கப்படும்.

36. பொதுமக்களுக்கு அனைத்து வகையான அரசு சேவைகளும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்குடன் பொதுச் சேவைபெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

37. தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். இதற்காக சட்ட வல்லுனர்கள், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் தலைமையிலான குழு பேச்சு நடத்தும்.

38. தமிழக அரசின் ஆண்டுத்திட்டம் ரூ. 55,000 கோடியாக இருக்கும்; இதில் வேளாண்துறை திட்டங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் ரூ.16,005 கோடி.

39. தமிழக அரசின் நேரடிக்கடன் சுமையும், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையும் ரூ. 4 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்தக் கடன்சுமையை 5 ஆண்டுகளில் போக்குவதற்கான சிறப்புத்திட்டத்தை பா.ம.க. வகுத்திருக்கிறது. அதன் விவரம் வருமாறு:

* தமிழக அரசுக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை அரசே நடத்துவது மற்றும் போட்டி ஏலமுறையில் தனியாருக்கு வழங்குவதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.22,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
* தாது மணல் குவாரிகளை சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம்  அரசுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கோடி வருவாய் கிடைக்க வகை செய்யப்படும்.
* ஆற்று மணல் விற்பனை முறைப்படுத்தப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18,000 கோடி கூடுதல் வருமானம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
* வணிக வரி வசூலில் காணப்படும் குறைகள் களையப்பட்டு ஆண்டுக்கு ரூ.22,000 கோடி  கூடுதல் வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* மேற்குறிப்பிட்ட 4 வகை நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,17,000 கோடி வருவாய் கிடைக்கும். முழுமையான மது விலக்கு நடைமுறைப் படுத்தப்படுவதால் அரசின் வருவாய் ரூ.25,000 கோடி அளவுக்கு குறையும். இதைக் கருத்தில் கொண்டால், தமிழக அரசுக்கு  ரூ. 92,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். இதில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அரசின் கடனை அடைக்க செலவிடப்படும்
.
மாநில பாதுகாப்பு ஆணையம்
40. காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.

41.  பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் தலைமை இயக்குனராக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்படுவார்.

42. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் மறுசீரமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 லட்சம் பேர் இருக்கும் வகையில் மாவட்டங்களின் எல்லைகள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

தொழில் வளர்ச்சி

43. தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஒற்றைச்சாளர முறையில் 3 வாரங்களில் வழங்கப்படும். ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு உதவ முதலமைச்சர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

44. தொழில் முதலீடு செய்பவர்களை சந்தித்து பேச முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவார்.

45. தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும் ஒரு பொருளாதார ஆணையரகமாக செயல்படும்.
.
46. ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமைச் செயலாளர் நிலையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் பொருளாதார ஆணையராக செயல்படுவார்.

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு

47. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.

48. தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கும் நோக்குடன் சிறப்புத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

49. இத்திட்டத்தின்படி தமிழகத்தை சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றுதல், சுற்றுலா மற்றும் மென்பொருள் சார்ந்த சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசு ஊழியர் நலன்

50.  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். 1.1.2016 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும் இந்த பரிந்துரைகள் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரே கட்டமாக வழங்கப்படும்.

51. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளன்றே அவர்களுக்கான அனைத்து ஓய்வூதியப் பயன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

52. புதிய ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
53. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். இதன் மூலம் 5 லட்சம் படித்த இளைய தலைமுறைக்கு அரசு வேலை வழங்கப்படும்.

54. அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.
55. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

56. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஓய்வூதியப் பயன்கள் உடனடியாக வழங்கப்படும்.

57. காவிரி பாசன மாவட்டங்களில் பாறை எரிவளி  திட்டத்திற்கும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய்ப் பாதை அமைக்கும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படாது.

58. எருமைப்பாலுக்கு லிட்டருக்கு ரூ. 42&ம், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.32&ம் கொள்முதல் விலையாக வழங்கப்படும்.

59. இலங்கைப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மீட்கப்பட்டவுடன் அவற்றை சீரமைப்பதற்குத் தேவையான முழுத் தொகையையும் அரசே மானியமாக வழங்கும்.

60.  தமிழகத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு அதன் ஒப்பந்ததாரர்களே பொறுப்பேற்க வேண்டும். சாலைகள் தரம் குறைவாக இருந்து,  சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.

61.  பேரூந்துகளில் எரிபொருள் சிக்கனம்,  சிறப்பான பராமரிப்பு, நிர்வாக சீர்திருத்தம், வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அரசுப் போக்குவரக்கழகங்கள் இலாபத்தில் இயங்கும் நிலை ஏற்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் திட்டம்

62. சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் (மெட்ரோ ரயில் திட்டம்) இரண்டாம்கட்டமாக ஆலந்தூர் முதல் விமானநிலையம் வரையிலான 5.1 கி.மீ. நீளப்பாதையில் ஆகஸ்ட் 15ம் தேதி போக்குவரத்து தொடங்கப்படும்.

63. சென்னை எழும்பூர் & திருமங்கலம் இடையிலான சுரங்கப்பாதையில் பெருநகர தொடர்வண்டித் திட்ட சேவைக்கான வெள்ளோட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பபடும். சோதனை ஓட்டம் முடிவடைந்தபின், அப்பாதையிலும் போக்குவரத்துத் தொடங்கப்படும்.

64. 2017 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் மொத்தம் 45 கி.மீ. நீளமுள்ள சென்னைப் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இருபாதைகளிலும் முழு அளவில் போக்குவரத்து தொடங்கப்படும். இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

65. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவை  கோயம்பேடு வரை விரிவுபடுத்தப்படும்.

66. சென்னையில் களங்கரை விளக்கம் முதல், சாத்தியமாகக்கூடிய தொலைவு வரை கடலில் படகுப் போக்குவரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.

67.  தமிழகத்தில் நிலுவையிலுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வசதியாக, அத்திட்டங்களுக்கான செலவில் 50 விழுக்காட்டை மாநில அரசு வழங்கும்.

மின் திட்டங்கள்

68. அடுத்த 3 ஆண்டுகளில் 6220 மெகாவாட் மின்திட்டங்கள்  செயல்படுத்தப்படும்.
69. அடுத்த 5 ஆண்டுகளில் 17,340 மெகாவாட் மின்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

70. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மின் தேவையில் 50 விழுக்காடு சூரியஒளி மின்திட்டம் மூலம் பெறப்படவேண்டும்.

71. காற்றாலைகளை மாற்றி அதிக மின்சாரம் உற்பத்தி செய்தல், கலப்பின மின் உற்பத்தி தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திச் செய்யப்படும்.

72. தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் மின்வாரியத்தின் வருவாயைப் பெருக்கி லாபத்தில் இயங்கும் நிலை உருவாக்கப்படும்.

73.  மின்வாரியத்தை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் மின்வாரியத்தின் கடன்  படிப்படியாக அடைக்கப்படும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
74. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிக்கு தமிழக அரசு உதவும். இதற்கான நிதி ரூ.40 கோடியை தமிழக அரசே வழங்கும்.

75. தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ் மொழி வளர்ச்சிக்கான ஆய்வுப்பணிகள் ஊக்குவிக்கப்படும்.

76. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயைத் தடுக்க சுகாதாரம் பேணப்படுவது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

77.  சுகாதாரம் மற்றும் துப்புரவை பராமரிப்பதற்கான அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

78. தமிழ்நாட்டில் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 2015-&2016 ஆம் ஆண்டில் 1,750 ஆக உயர்த்தப்படும்.

79. விழுப்புரத்தில் அடுத்த ஆண்டு சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

80. பன்றிக் காய்ச்சலுக்கான ஆய்வு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும். சிகிச்சைத் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

81. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வாரத்திற்கு இரண்டு பாடவேளை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படும்.

82. பெண் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் மரபு சார்ந்த தற்காப்புக் கலைகள் கற்றுத்தரப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம்
83. அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73 ஆவது திருத்தத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும். 29 துறைகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

84. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான 50% இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

85. நகர்ப்புற நிர்வாக முறையின் (ஹிக்ஷீதீணீஸீ நிஷீஸ்மீக்ஷீஸீணீஸீநீமீ) அனைத்து முக்கிய அம்சங்களும் நகராட்சி நிர்வாகத்தின் அங்கங்களாக்கப்படும்.

86. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய தண்ணீர் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும்.

87. தண்ணீர் உரிமைத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு குடிநீருக்காக எவரும் ஒரு காசு கூட  செலவிடத் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
88. எவரேனும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உருவானால், அதை நிரூபிக்கும் பட்சத்தில் அவர்கள் குடிநீருக்காக செலவிட்டதைப் போன்று 10 மடங்குத் தொகை அவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.

முழு மதுவிலக்கு

89. தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்றவுடன் மதுவிற்பனை 2 மணிநேரம் குறைக்கப்பட்டது.  தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதுபோதுமானதல்ல என்பதால், இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்  முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

90. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது, பீர் ஆலைகளுக்கு வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டு, மது ஆலைகள் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு சொட்டு மதுகூட உற்பத்தி செய்யப்படவில்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்.

91. கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், குடிநோயர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

92. அனைத்து மக்களின் பெயர் விவரம், வயது உள்ளிட்ட தகவல்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், 60 வயது நிறைவடைந்த அனைவருக்கும் அரசே தானாக நிதியுதவி வழங்கும். இதற்காக, எவரும் விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை

93. இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

94. தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழும் வகையில் அனைத்து வசதிகளும், சலுகைகளும் வழங்கப்படும். அவர்கள் விரும்பும் பட்சத்தில், அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும்.

மாற்றுத்திறனாளிகள் நலன்

95. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

96. கன்னியாகுமரி மாவட்டம் பசுமைச் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்படும்.

97. தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைத்த 12 ஸ்மார்ட் நகரங்களை (Smart City) விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

98. நகரங்களில் பேருந்து நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வை-ஃபை (Wi-fi) வசதி செய்துத்தரப்படும்.

99.  நகர்ப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளின் விலையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

100. பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயர்த்தும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

No comments

Popular Posts

Powered by Blogger.