மதுரையில் மாணவ, மாணவியரின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் நவீன ஆய்வகம் அமைக்க மாவட்டத்தில் 6 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அப்பள்ளிகள் ஆய்வகத்துக்கான நிதி கோரி மத்திய அரசுக்கு நேரடியாக விண்ணப்பிக்க  உள்ளன.
மத்திய அரசு அடல் இனோவேசன் மிஷன் எனும் சிறப்புத் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்தவுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுவருகின்றன.
திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் தங்களது அறிவியல் ஆய்வுத்திறனை சோதிக்கவும், அதை செயலாக்கத்துக்கு கொண்டுவரவும் உதவும் வகையில் ஆய்வகம் அமைக்கப்படவேண்டும்.
திட்டத்தின்படி ஆய்வகம் அமைக்க 1500 சதுர அடி அறைக்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். அங்கு ஆய்வகம் அமைக்கவும், ஆய்வுக்கான சாதனங்கள் மற்றும் மாணவர்கள் விரும்பும் உருவங்களை வடிவமைக்கும் சாதனங்களை வாங்கிவதற்கான நிதி உதவியை மத்திய அரசு அளிக்கும். அதனடிப்படையில் ஐந்தாண்டுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படவுள்ளது.
நவீன ஆய்வகம் அமைக்க மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பேரையூர், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், திருமங்கலம் பி.கே.என்.மேல்நிலைப் பள்ளி, மேலூர் பகுதி ஸ்ரீராம்நல்லமணி மேல்நிலைப் பள்ளி ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வான பள்ளிகள் ஆன்லைன் மூலம் நவீனஆய்வகத்துக்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பிக்க உள்ளன. விண்ணப்பம் அடிப்படையில் மத்திய குழு ஆய்வு நடத்தப்பட்டு பள்ளிகளில் நவீன ஆய்வகம் அமைக்கும் பணி தொடங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 13 மாவட்டங்களில் இன்னும் பள்ளிகள் அடையாளம் காணப்படவேண்டியுள்ளது என்றும் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறினர்.

No comments

Popular Posts

Powered by Blogger.