அவதூறு வழக்குகள் மூலம் அதிகார துஷ்பிரயோகம் - கலைஞர் கருணாநிதி அறிக்கை

அவதூறு வழக்குகள் மூலம் அதிகார துஷ்பிரயோகம்!

இந்திய உச்ச நீதி மன்றம்,  நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கிப் பல முறை பல கேள்விகள் கேட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது  மேலும்  ஒரு கேள்வி கேட்டுள்ளது!

ஒரு அரசியல் எதிராளி மீது  அவதூறு  வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டும் வகையில் அனுமதி வழங்க    ஒரு முதலமைச்சர் தன்னுடைய  அதிகாரத்தையும்,  செல்வாக்கையும்  பயன்படுத்த முடியுமா?”   இந்தக் கேள்விக்குத் தான் அடுத்த நான்கு  வாரங்களுக்குள் தானே   பதிலளிக்குமாறு தமிழக முதலமைச்சரை  உச்ச நீதி மன்றம் கேட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு அவ்வப்போது உரிய பதில்களைச் சொல்லத் திராணியும், தைரியமும் இல்லாதவர்கள் தான் அவதூறு வழக்குகள் என்ற பெயரால் அரசு செலவில் எதிர்க் கட்சியினரை அச்சுறுத்திப் பழிவாங்குகின்ற வகையில் இப்படியெல்லாம் கொல்லைப்புற வழியில் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுத்து நல்ல பாடம் புகட்டும் வகையில் தான் தற்போது உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஆக்க பூர்வமானதும் கூர்மையானதுமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய எண்ணத்தையும் வழியையும் திருத்திக் கொள்ளக் கூடியவரா நமது முதல் அமைச்சர்! இதுவரை எத்தனை நீதிபதிகள் சீர்திருத்திச் செழுமைப்படுத்திடும் நோக்கில் தங்கள் ஆழ்ந்த கருத்துகளை தமிழக முதல் அமைச்சரை நோக்கிச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் செவிமடுத்து வருத்தப்படாதவரா, இதற்காகச் சிந்தித்துத் தனது வழக்கமான பாதையைச் செப்பனிட்டுக் கொள்ளப் போகிறார்?

No comments

Popular Posts

Powered by Blogger.