மாணவர்கள் தொலைக்காட்சி-கணினியில் தங்களது நேரத்தை செலவிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்

சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்க்க அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வருகை தந்தனர். இவர்களைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா தனது அறைக்கு அழைத்து, இனிப்புகளை வழங்கினார். பின்னர், அவர்களைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது, அவர் பேசியது:-
உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த ஆச்சரியத்தையும், எதிர்பாராத மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. கோட்டையை வந்து பார்வையிட்டதால், பயனுள்ள தகவல்களும், கல்வி சார்ந்த அறிவும் கிடைத்திருக்கும்.
மிகச் சிறந்த ஒளிமயமான, நன்கு படிக்கக் கூடிய இளம் தலைமுறையினரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பினைப் பெறுவேன் என்று நினைக்கவில்லை. மிகச் சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள். சிறந்த நன்னடத்தை, அணுகுமுறை ஆகியவற்றுக்காக மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்.
இளம்பருவ வயதில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதர கலை நிகழ்வுகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளலாம். அதற்காக, கணினி, தொலைக்காட்சி, விடியோ கேம்ஸ் போன்றவற்றில் நேரத்தை வீணாகச் செலவிடக் கூடாது. உடல் பலம் பெறும் வகையில் விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும்.
எந்தத் துறைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் சிறப்புற்று விளங்குவீர்கள். சிறந்த எதிர்காலம் அமையும். மாணவர்களுக்கு எந்தவகையான உதவிகள் எந்த நேரத்தில் தேவைப்பட்டாலும் செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவே ஆட்சியாளர்கள் இருக்கிறோம்.
உங்களை எல்லாம் சந்தித்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.


No comments

Popular Posts

Powered by Blogger.