மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - திரு மு.க.ஸடாலின்

கல்விக்கடனை உடனடியாக திருப்பிச்  செலுத்த வேண்டும் என்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கொடுத்த துன்புறுத்தல் தாங்க முடியாமல் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின்  தற்கொலை செய்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வங்கி அதிகாரிகளின் இந்த கெடுபிடி வசூல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. மாணவனை இழந்து தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்கொலை செய்து கொண்ட லெனின் சிவில் என்ஜினியரிங் படிப்புக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்  ரூ.1.90 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். அக்கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த லெனின் பெற்றோருக்கு வங்கி தரப்பிலிருந்து கடும் நெருக்கடி கொடுத்துள்ளார்கள். இதன் உச்சகட்டமாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தனியார் வசூல் ஏஜென்ட்  மாணவர் லெனினை மிரட்டி, அவருடையை மதிப்பெண் சான்றிதழ்களையும் பறித்துச் சென்றுள்ளார். மாணவர்கள் தங்களின் எதிர்காலமாக கருதப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வசூல் ஏஜெண்டுகள் பறித்தது கொடூரச் செயலாகும்.

“வங்கிகள் குண்டர்கள் அல்லது வசூல் ஏஜெண்டுகளைப் பயன்படுத்தி கடன் பெற்றவர்களிடம் பறிமுதல் செய்யக் கூடாது” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. “வசூல் ஏஜெண்டுகள்” குறித்து இந்திய ரிசர்வ் வங்கியும் தெளிவான அறிவுரைகளை வங்கிகளுக்கு வழங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக “வசூல் ஏஜெண்டுகள் அத்துமீறி நடந்தால் அந்த வங்கிக்கு “வசூல் ஏஜெண்ட்” நியமிக்கும் உரிமை தற்காலிகமாக பறிக்கப்படும்” என்றே சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது. ஆனாலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியே உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், ரிசர்வ் வங்கி உத்தரவையும் மீறி இப்படி ஈவு இரக்கமற்ற முறையில் லெனின் என்ற மாணவர் குடும்பத்தினரை மிரட்டியிருப்பது வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் இப்படி அத்துமீறி நடந்து கொள்ளும் வசூல் ஏஜெண்டுகள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்களுக்கு இது போன்றதொரு அவல நிலைமை வரக்கூடாது என்பதற்காகத்தான் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் கழகத்தின் சார்பில் உறுதியளித்திருந்தோம். ஆனால் தேர்தல் தில்லுமுல்லுகள் மூலம் அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டதால், திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத சூழல் உருவாகிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் கல்விக்கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்த போதிலும், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ”வேலை கிடைக்காத மாணவர்களின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கையெழுத்திட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த மாநிலத்தின் எதிர்காலமாக கருதப்படும் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காட்டிய அலட்சியத்தால் மதுரை அவுனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ஆகவே இனியும் தாமதம் செய்யாமல் மாணவர்களின் கல்விக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். லெனின் மரணத்திற்கு காரணமான குறிப்பிட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி இனி வசூல் ஏஜெண்டுகளை வைத்து மாணவர்கள் கடனை வசூல் செய்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments

Popular Posts

Powered by Blogger.