புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் பயிர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தில், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நடவுக் காலத்துக்கு 1.5 சதவீதம் என்ற அளவிலும், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கு 2 சதவீதம் என்ற அளவிலும் விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதம் மாநில அரசும் வழங்கும். புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் தமிழக அரசுக்கு அதிகளவு செலவு ஏற்படும். எனினும், விவசாயிகளுக்கு அதிக பயன் அளிக்கக் கூடிய திட்டமாக இருப்பதால் கூடுதல் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும். இதுவரை பயிர்க் காப்பீட்டு கட்டண மானியமாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.40 கோடி மட்டுமே மாநில அரசு செலுத்தி வந்தது. புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதன் காரணமாக கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அளவிலேயே இப்போதும் விவசாயிகள் காப்பீடு செய்தால் அரசு சுமார் ரூ.500 கோடி காப்பீட்டு மானியமாக வழங்க வேண்டும். அதிகளவில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தால் அரசு வழங்க வேண்டிய காப்பீட்டு மானியம் இன்னும் அதிகரிக்கும்.தென்னை விவசாயிகளைப் பொறுத்த வரை இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் எனக்கூறியுள்ளார்.
No comments