காமராஜரால்தான் தன்னால் மருத்துவம் படிக்க முடிந்தது - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
விருதுநகர்; காமராஜரால்தான் தன்னால் மருத்துவம் படிக்க முடிந்தது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
காமராஜரின் 114-வது பிறந்த நாள் விழா கல்வித் திருவிழாவாக விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய டாக்டர் ராமதாஸ், “நான் மருத்துவராகக் காரணம் காமராஜர்தான். மருத்துவப் படிப்பில் நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம்பெற்ற ஒருவர் எனக்கு மருத்துவ சீட் கிடைக்கவேண்டுமானால் நான் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டார். அப்போது அது பெரிய தொகை என்பதால், அவ்வளவு தொகை இல்லை என்னிடம் இல்லை எனக் கூறிவிட்டேன். இதனால் எனக்கு சீட் கிடைக்காது என துயரமடைந்தேன்.
ஆனால் அடுத்த நாள் நான் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது பணம் கேட்ட நபர் அங்கு இல்லை. விசாரித்தபோது, அந்த நபர் என்னைப் போல் பலரிடமும் லஞ்சம் கேட்டதாகவும் அந்தத் தகவல் அப்போதைய முதல்வர் காமராஜருக்கும் சென்றதையடுத்து கோபப்பட்ட காமராஜர், குறிப்பிட்ட அந்த நபரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டார் எனவும் தெரியவந்தது.
அதன்பின் நேர்மையாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டதால் எனக்கு மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள தொழிற்சாலைகள், நீர்த்தேக்கங்கள், அணைகள் அனைத்தும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கப்பட்டன” என்றார்.
நன்றி விகடன் மாத இதழ்
No comments