சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்கள் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

அனைத்திந்திய அளவில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர் (Chartered Accountant -CA) தேர்வில் தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற 20 வயது மாணவர் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு  வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வணிகவியல் பயிலும் அனைவரின் கனவும் பட்டயக் கணக்காளராக வேண்டும் என்பது தான் பெருங்கனவாக இருக்கும். எனினும் இத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்பதால் பலருக்கும் இந்தக் கனவு நனவாவதில்லை. சேலத்தில் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மாணவர் ஸ்ரீராம் அவரது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருப்பது மட்டுமின்றி, 76.63% மதிப்பெண்  பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். இது சாதாரண ஒன்றல்ல. கடும் உழைப்பு, ஆசிரியர்களின் வழிகாட்டல், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கும். இதற்கு காரணமான அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டயக் கணக்காளர் தேர்வில் சென்னையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்ற மாணவர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதித்தார். இப்போது ஸ்ரீராம் அதே சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி பெனோ ஜோசஃபின் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்டுக்கு ஆண்டு தமிழக மாணவர்கள் படைக்கும் சாதனை நமக்கு பெருமை அளிக்கிறது. இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு கடுமையான உழைப்பு மற்றும் புத்திசாலித் தனமான அணுகுமுறை மூலம் அவற்றை எட்டி சாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments

Popular Posts

Powered by Blogger.