மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் மனமாற்றம் - கலைஞர் கருனாநிதி

மாநிலங்களிடை மன்றத்தின் (Inter-State Council) கூட்டம், சுமார் பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் வரவேற்கத்தக்க சில கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். நீதிபதி எம்.எம். புன்சி தலைமையிலான ஆணையமும், மத்திய-மாநில உறவுகள் குறித்து 2010இல் பல பரிந்துரைகளை வழங்கியது. நீதிபதி சர்க்காரியா கமிஷன் அளித்த பரிந்துரைப்படிதான் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கடந்த 1990இல் சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங், தி.மு. கழகமும் பங்கெடுத்துக் கொண்ட தேசிய முன்னணியின் பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறையேனும் இந்தக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு மாநிலங்களின் பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும். ஆனால், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக மாநிலக் கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான இந்தக் கூட்டத்திற்குத்தான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அவருக்குள்ள அதிகப் பணிகளின் காரணமாகச் செல்லாமல், நிதியமைச்சரிடம் தயாரிக்கப்பட்ட தனது உரையைக் கொடுத்தனுப்பி, அங்கே படிக்கச் செய்திருக்கிறார். ஒருவேளை தனக்குத் தெரியாததையா அங்கே பேசி விடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்திருக்கலாம்.  அதுபற்றிக் கூட, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவர்கள், “டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்ட மிக முக்கியக் கூட்டம் நடந்தது.  இதில் பெரும்பாலான மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். பல முக்கியப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.  காஷ்மீர் தீவிரவாதம், மாநில கவர்னர்கள் நியமனம் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது.  சில மாநில முதல்வர்கள், கவர்னர்களே தேவையில்லை, அந்தப் பதவிகளை எடுத்து விடலாம் என வலியுறுத்தினர். பிரதமர் தலைமையில் நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா  நிச்சயமாகக் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

விரிவாக: http://www.twitlonger.com/show/n_1sotoi9?new_post=true

1970ஆம் ஆண்டுகளில் நமது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைகள், தற்போது டெல்லியிலே நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில் பிரதமர் அவர்களால் பேசப்பட்டு, பல மாநில முதலமைச்சர்களும் ஏன் அ.தி.மு.க. முதலமைச்சர் உட்பட அதே கருத்துக்களை எடுத்து வைக்கும் அளவிற்கு, மாறி விட்ட நிலைமைகளைப் பார்க்கும்போது, அறிஞர் அண்ணா அவர்களின் வழியில், தொடக்கத்திலிருந்து மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்துவரும் நமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படும் அல்லவா?

No comments

Popular Posts

Powered by Blogger.